X

நெடுநல்வாடை- திரைப்பட விமர்சனம்

50 நண்பர்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் இளங்கோ, அஞ்சலி நாயர் மற்றும் பூ ராம் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நெடுநல்வாடை’ எப்படி என்பதை பார்ப்போம்.

தாத்தா, பேரனுக்கு இடையே நடக்கும் பாச போராட்டத்தையும், காதல் பிரிவின் வலியையும் கிராமத்து கதைக்களத்தில் சொல்லியிருப்பது தான் படத்தின் கதை.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் விவசாயினா பூ ராமின் மகள் செந்தி, தனது கணவரின் கொடுமை தாங்காமல் தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்கு வந்துவிடுகிறார். காதல் திருமணம் செய்ததால், அவரை அவரது அண்ணன் மைம் கோபி ஏற்க மறுப்பதோடு, அவரை அடித்து விரட்ட, மகனுடன் மல்லுக்கட்டும் பூ ராம், தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அடைக்கலம் தருகிறார்.

செந்தியின் மகன் ஹீரோ இளங்கோ நன்றாக படித்து, நல்ல வேலைக்கு சென்றால் தான் தனது மகள் கடைசி காலத்திலாவது நிம்மதியாக வாழ்பாள் என்பதற்காக பூ ராம் தனது பேரனை நன்றாக படிக்க வைக்க நினைக்கிறார். அதன்படி ஹீரோ இளங்கோவும் நல்லபடியாக படித்தாலும், இளசுகளுக்கு இருக்கும் விளையாட்டு புத்தியுடன், காதலும் வந்துவிடுகிறது.

பேரனின் காதல் விவகாரத்தை அறியும் பூ ராம், அவருக்கு கட்டுப்பாடு போடுவதோடு, குடும்ப பின்னணியை மனதில் வைத்து வாழ்க்கையில் உயர வேண்டும், என்றும் கூறுகிறார். தாத்தாவின் பேச்சை கேட்டு காதலை கை கழுவும் ஹீரோ இளங்கோ, படித்து முடித்த பிறகு, தனது காதல் பிரிவின் வலியை தாத்தாவுக்கு புரிய வைக்கிறார். பேரனின் மனதை புரிந்துக் கொள்ளும் பூ ராம், அவர் நினைத்தபடி அவரது காதலியுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கும் போது, வேறு விதத்தில் இளங்கோவின் காதலுக்கு பிரச்சினை வர, இறுதியில் அவர் காதலியை கரம் பிடித்தாரா அல்லது குடும்பத்திற்காக காதலை தியாகம் செய்தாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

தமிழ் இலக்கிய நூலில் பிரிவைப் பற்றி சொல்லும் பகுதியான ‘நெடுநல்வாடை’ யை தலைப்பாக தேர்வு செய்திருக்கும் இயக்குநர் படத்தையும் தனித்தன்மையோடு கையாண்டிருக்கிறார்.

குடும்ப உறவுகள் பற்றியும், காதல் பிரிவு பற்றியும் சொல்லும் இப்படத்தின் கதையை 90 களில் நடப்பது போல எழுதியிருக்கும் இயக்குநர் செல்வகண்ணன், திருநெல்வேலி வட்டார மொழியை கச்சிதமாக கையாண்டிருப்பதோடு, அந்த கிரமாத்தில் வாழ்ந்த உணர்வை படம் பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தி விடுகிறார்.

ஹீரோவாக நடித்திருக்கும் புதுமுகம் இளங்கோவும், ஹீரோயினாக நடித்திருக்கும் புதுமுகம் அஞ்சலி நாயரும் கதாபாத்திரத்திற்கான கச்சிதமான தேர்வாக இருக்கிறார்கள். அதிலும் அஞ்சலி நாயர் துருதுருப்பான நடிப்பு மற்றும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் மூலம் அசத்துகிறார். பக்கத்து வீட்டு பையன் போல இயல்பாக நடித்திருக்கும் இளங்கோ, கிராமத்து இளைஞனாக அப்படியே பிரதிபலிக்கிறார்.

பூ ராம் படத்தின் முக்கிய தூனாக இருக்கிறார். ஹீரோவுக்கு தாத்தா என்றாலும், அவரது வேடமும் நடிப்பும் அவரையே ஹீரோவாக ரசிகர்கள் மனதில் நிறுத்திவிடுகிறது. ஒரு மோகன்லாலை திரையில் பார்ப்பது போல பூ ராம் நடித்திருக்கிறார். நிச்சயம் இந்த படத்திற்கு பூ ராமுக்கு விருதுகள் பல காத்திருக்கிறது.

மைம் கோபி, சிந்தி என்று படத்தில் நடித்த அனைவரும் அவர்களது வேலையை கச்சிதமாக செய்திருந்தாலும், ஹீரோயினின் அண்ணன் வேடத்தில் நடித்திருக்கும் அஜெய் நட்ராஜ் வேடமும், அதில் அவர் வெளிக்காட்டிய நடிப்புக்கும் ஆயிரம் அப்ளாஷ் கொடுக்கலாம். ஒட்டு மொத்தத்தில், படத்தில் நடித்த அனைவரும் ஏதோ நடித்தது போல அல்லாமல், திருநெல்வேலி மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு படம் பார்ப்பவர்களை கிராமத்துக்குளே அழைத்து சென்ற அனுபவத்தை கொடுக்கிறது. இப்படியும் காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டாலாம் என்பதை அவரது ஒவ்வொரு பிரேமும் நிரூபித்திருக்கிறது. ஜோஸ் பிராங்கிளினின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் புரியும்படியும் கேட்கும்படியும் இருக்கிறது. அதிலும், “கருவா தேவா….” பாடல் படத்தின் மிகப்பெரிய ஹைலட்டாக இருக்கிறது.

வறட்சியான கிராமத்தை காட்டுவதோடு, கதையிலும், கதாபாத்திரங்களை கையாள்வதிலும் வறட்சியை காட்டி வந்த நிலையில், அழகான, பசுமையான ஒரு கிராமத்தை கதைக்களமாக காட்டியிருக்கும் இயக்குநர் செல்வகண்ணன், சாதாரணமான கதையாக இருந்தாலும், குடும்ப உறவுகளின் பாசப் போரட்டத்தையும், அதே சமயம் காதல் பிரிவின் வலியையும் நேர்த்தியாகவே படமாக்கியிருக்கிறார்.

ஆரவாரம் இல்லாத அமைதியான திரைக்கதை நகர்ந்தாலும், படத்தின் காட்சிகளும், நடிகர்களின் இயல்பான நடிப்பும் கதையுடன் நம்மையும் ஒன்றிவிட செய்துவிடுகிறது.

மொத்தத்தில், அழகான காதல் கதையாக மட்டும் இன்றி குடும்ப உறவுகளை பற்றி பேசும் படமாகவும் இருக்கும் இந்த ’நெடுநல்வாடை’ யை குடும்பத்தோடு பார்க்கலாம்.

-ஜெ.சுகுமார்