NCERT புத்தகங்களுக்கு இந்தி பெயர்கள் – எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்
மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையே மிருதங் மற்றும் சந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய புத்தகங்கள் முன்னதாக மொழிக்கேற்ப பெயரிடப்பட்டு வந்தன.
ஆனால் இந்த முறை, கணிதப் புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு கணித பிரகாஷ் என்ற இந்தி பெயர் வழங்கப்பட்டது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், NCERT-யின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், NCERT புத்தகங்களுக்கு இந்தியில் பெயரிடப்பட்டதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா?” என்று பதிவிட்டுள்ளார்.