பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியுள்ளார்.
2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தில் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டி இருந்தார். தனுஸ்ரீயின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பாலியல் புகாரை நானா படேகர் தொடர்ந்து மறுத்து வருகிறார். தனுஸ்ரீ பொய் சொல்வதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நானா படேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று அவர் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே தனுஸ்ரீ தத்தா ஒஹிவாரா போலீஸ் நிலையத்துக்கு சென்று நானா படேகருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தார். ஏற்கனவே கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
தனுஸ்ரீ அளித்த புகாரை தொடர்ந்து நானாபடேகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து மும்பை மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் மனோஜ் குமார் சர்மா கூறும் போது, “நானா படேகர் உள்ளிட்டோர் மீது 354 மற்றும் 509 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் நாங்கள் வழக்குபதிவு செய்துள்ளோம்“ என்றார்.
இதை தொடர்ந்து நானா படேகர் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அவரை போலீசார் விரைவில் கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.