நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் – தனுஸ்ரீ தத்தா கோரிக்கை

பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறியுள்ளார்.

2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்து வந்தார். தனு ஸ்ரீதத்தா பொய் கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து நானா படேகர் உள்பட 4 பேர் மீது போலீசார் 354 மற்றும் 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே நானா படேகரை உடனே கைது செய்ய வேண்டும். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று ஒஹிவாரா போலீசில் நடிகை தனுஸ்ரீதத்தா வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் சார்பில் வக்கீல் நிதின் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். அவர்கள் நெருக்கடி கொடுத்து சாட்சிகளை கலைத்து வெளியே வரக் கூடியவர்கள். இதனால் நானாபடேகர் உள்பட 4 பேரை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்.

இவ்வாறு ஒஹிவாரா போலீசில் அளித்துள்ள மனுவில் தனு ஸ்ரீதத்தா தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools