மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் 5 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி) வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள், தாக்குதலுக்கு சதி செய்தவர்கள் மற்றும் உதவியவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் இந்த வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறியுள்ளார்.