கரூர் குள்ளம்பட்டியில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது. ஏனெனில் அவர்கள் தரப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரே இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என கூறியிருக்கிறார்.
இந்த ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாவின் ஆட்சி. ஐந்து ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும். தீர்ப்பு எப்படி வந்தாலும் அது அ.தி.மு.க. ஆட்சிக்கு உறுதி சேர்க்கும் வகையிலும், வலிமை சேர்க்கும் வகையிலும்தான் இருக்கும்.
புகார்கள் காரணமாக சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. இதன் மூலம் சி.பி.ஐ. மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்து விட்டது. சி.பி.ஐ. எந்த நிலையில் இருக்கிறது என்பதை மு.க. ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழியை விடுதலை செய்தபோது சி.பி.ஐ. எங்களுக்கு உரிய ஆதாரங்கள் தரவில்லை, அதனால்தான் விடுதலை செய்தோம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறவில்லை.
இதன் மூலம் சி.பி.ஐ. அவர்களுக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. தி.மு.க.வினர் பா.ஜ.க.வுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது சி.பி.ஐ.யை ஏவி விடுகிறார்கள்.
தமிழகத்தில் இந்தியை தாய்மொழியாக கொண்ட 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக டெல்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தி படித்தால்தான் வேலை வாய்ப்பு என்று தேசிய கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் இந்தி படித்தவர்களே இங்கு வந்துதான் வேலை பார்க்கிறார்கள். தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க. அரசு அதிகாரமில்லாத அரசாகத்தான் இருந்துகொண்டு இருக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களை படிப்படியாக மத்திய அரசு எடுத்துக்கொண்டு வருகிறது.
ஜி.எஸ்.டி., நீட் தேர்வு ஆகியவற்றை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், நாங்களும் எதிர்த்தோம். ஆனால் அதனை அமல்படுத்தி விட்டார்கள். சர்க்கசில் சிங்கம், புலிகளை கட்டுப்படுத்தும் ரிங் மாஸ்டர் போன்று அ.தி.மு.க.வை பிரதமர் நரேந்திரமோடி கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். அதனை நான் ஒத்துக்கொள்கிறேன்.
எங்களுக்கு மோடி ரிங் மாஸ்டர் என்றால் தி.மு.க.வுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக இருந்துகொண்டு வருகிறார். இதுதான் உண்மை. இதனை காலப்போக்கில் என்னால் நிரூபிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.