எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஷ் செப்டம்பர் 20ம் தேதி திறந்து வைத்தார். 17 பணியாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு முதல் நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜரானார். பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2011 முதல் 2016 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரைப் பற்றி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக 3 வழக்குகள் தொடரப்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
இதையடுத்து இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பாக மு.க. ஸ்டாலின் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தொடர்ந்து ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டார். அதன்படி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.