‘20 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் ஆடும் லெவனில் இருந்து மிதாலி ராஜை நீக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் எடுத்த முடிவை கேள்வி கேட்க முடியாது’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்தார்.
வெஸ்ட்இண்டீசில் நடந்த 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.
லீக் ஆட்டங்களில் கம்பீரமாக செயல்பட்ட இந்திய அணி அரைஇறுதி ஆட்டத்தில் மோசமாக ஆடியது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் அரைசதம் அடித்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் உடல் தகுதியுடன் இருந்தும் முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். அந்த வெற்றி கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜ்க்கு இடம் கிடைக்கவில்லை. எல்லா முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப்படுகிறது. இதில் வருத்தப்பட எதுவுமில்லை’ என்று மிதாலி ராஜ் நீக்கம் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து மிதாலி ராஜ் மேலாளர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக சாடினார். இதனால் இந்த பிரச்சினை மேலும் வலுத்தது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினரும், இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனுமான டயானா எடுல்ஜி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி கண்ட அணியில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று இந்திய அணி நிர்வாகம் (கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார், துணை கேப்டன் மந்தனா, தேர்வாளர் சுதாஷா) எடுத்த முடிவு பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால் அந்த முடிவு குறித்து யாரும் கேள்வி கேட்டு இருக்கமாட்டார்கள். ஆடும் லெவன் குறித்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவை நாங்கள் கேள்வி கேட்க முடியாது. உதாரணமாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய வீரர் குருணல் பாண்ட்யா விக்கெட் எடுக்காமல் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தார். ஆனால் கடைசி 20 ஓவர் போட்டியில் அவர் வலுவாக மீண்டு வந்து விக்கெட்டுகள் சாய்த்தார். விளையாட்டில் இது போன்ற விஷயங்கள் நடக்க தான் செய்யும்.
என்னை பொறுத்தமட்டில் அன்று இந்திய அணிக்கு மோசமான நாளாகும். நமது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இங்கிலாந்து அணி நன்றாக செயல்பட்டு இலக்கை சேசிங் செய்தது. பனிப்பொழிவு நமது பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எதிர்பார்ப்புக்கு மாறாக நமது அணி பெரிய வெற்றியை ஈட்டியது. அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்வியை மறந்து அடுத்து வரும் நியூசிலாந்து தொடர் குறித்து வீராங்கனைகள் கவனம் செலுத்த வேண்டும். மிதாலி ராஜ் விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் நடத்தும் திட்டம் எதுவுமில்லை. அணி தேர்வு விஷயத்தில் நிர்வாக கமிட்டி தலையிட வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்ததாக கூறப்படுகிறது.