தமிழகத்தை உலுக்கியெடுத்த கஜா புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், உயிர் சேதம் பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், வானிலை மையத்தில் சரியான கணிப்பு தான். வானிலை மையத்தின் கணிப்பால் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களில் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் தான் உயிர் சேதம் பெரிய அளவில் ஏற்படவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை துறையை நாங்கள் முன் கூட்டியே உஷார்படுத்தி இருந்தோம்.
இந்த நிலையில் கஜா புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தகவல்களை வழங்கிக் கொண்டே இருந்தது.
புயல் வருவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அது காற்றழுத்த தாழ்வு நிலையாக இருக்கும்போதே நாங்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினோம்.
மரங்கள் சாய்ந்தால் அதை அகற்றுவதற்கான எந்திரங்கள், மரம் அறுக்கும் மிஷின், ஜே.சி.பி. எந்திரங்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், தகர கொட்டகையில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள ‘கான்கிரீட்’ கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், சமுதாய நல கூடங்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்குமாறு முன் கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம்.
கடலோர மாவட்டங்களில் இந்த பணிகளை மேற்பார்வையிட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் வருவதற்கு முன்பே அனுப்பி வைத்தார். அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் முன்கூட்டியே சென்று தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் கஜா புயலின் நகர்வை சிறப்பாக கணித்து எங்களுக்கு அவ்வப்போது தகவல்களை வழங்கியது. இந்த தகவல் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
இந்த தகவல்கள் மூலம் பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்க முடிந்தது. அதிகளவு உயிரிழப்பு ஏற்படாமல் மக்களை காப்பாற்றியது அரசின் சாதனையாகும்.
இப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் புயலால் ஏற்பட்டதா? அல்லது சுவர் இடிந்து மின்சாரம் தாக்கிய காரணங்களால் ஏற்பட்டதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம்.
கடலில் புயல் மெதுவாக நகர்ந்து வந்த காரணத்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள அனைத்து மக்களையும் நாம் வெளியேற்றி விட்டோம். புயலால் சேதம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்ததால் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் ரத்து செய்தோம்.
மின்கம்பங்கள் சாய்ந்தால் உடனே அதை சரிசெய்வதற்கு 15 ஆயிரம் மின் கம்பங்களை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
கடந்த காலங்களில் புயலால் ஏற்பட்ட பாடங்களை முன்நிறுத்தி இந்த முறை அதிகளவு முன்எச்சரிக்கை எடுத்தோம். புயல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்ததால் போதிய கால இடைவெளியுடன் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிந்தது.
புயல் கடந்த உடனேயே இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கையிலும் இப்போது முழு வீச்சுடன் இறங்கி உள்ளோம். நிவாரண முகாம்களில் உள்ள மக்கள் விரைவில் வீடு திரும்புவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.
சேத விவரங்களை தனித் தனியாக கணக்கெடுத்து வருகிறோம். இடிந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் சாய்ந்து முறிந்த தென்னை மரங்கள், மாமரம், பலா, முந்திரி, புளிய மரங்கள், வாழை மற்றும் சேதமான நெற்பயிர்களையும் கணக்கெடுத்து வருகிறோம். பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும். மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடக்கிறது.
இனி எத்தனை புயல் வந்தாலும் அதனை எளிதாக எதிர்கொண்டு விடுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.