Tamilசெய்திகள்

257 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் – அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி பெறவேண்டும் என்று நிபந்தனை விதித்து 2018-2019 கல்வியாண்டுக்கு மட்டும் அரசு தற்காலிக அங்கீகாரம் வழங்கிவருகிறது. அதன்படி இதுவரை 1,153 பள்ளிகளுக்கு அரசு அங்கீகார ஆணை வழங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 257 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஆணைகளை 7 பேருக்கு மேடையில் வழங்கினார். பின்னர் மீதமுள்ள 250 பேருக்கும் அவர்களின் இருக்கைக்கு சென்று வழங்கினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சத்யா, விருகை ரவி, மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குனர் எஸ்.கண்ணப்பன், இணை இயக்குனர் உஷாராணி, காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வரவேற்றார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி நன்றி கூறினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களின் நலன்கருதி அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு இந்த வருடத்திற்கு மட்டும் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான இறுதி முடிவு 2 வாரத்தில் அறிவிக்கப்படும்.

அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகள் வரும்போதும், பள்ளியைவிட்டு செல்லும்போதும் அவர்களின் உருவம் ரேடியோ பிரீக்வன்சி தொழில்நுட்ப (ஆர்.எப்.ஐ.டி.) கருவியில் பதிவாகி அவர்களின் பெற்றோர் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி கொண்ட நவீன கருவி ஒரு பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளது. மாணவிகள் அதிகம் படிக்கும் குறைந்தது ஆயிரம் அரசு பள்ளிகளில் இந்த கருவியை பொருத்துவது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கான விடைத்தாள்களும் (ஓ.எம்.ஆர். ஷீட்) டெல்லியில் உள்ள எந்திரம் மூலம் தான் ஸ்கேன் செய்யப்பட்டது. பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் 192 பேரின் மதிப்பெண்கள் மாறியிருந்தது. எனவே இதுகுறித்து போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த எந்திரத்தை நாங்கள் வாங்க இருப்பதால் இனிமேல் தவறு நடக்காது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *