பாலியல் புகார்களுக்கு அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதிலளிக்க வேண்டும் – அமைச்சர் ஸ்மிரிதி இரானி

பிரபல பத்திரிக்கையாளராக இருந்து, பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? அவர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே மத்திய அமைச்சர்களாக இருக்கும் சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அமைச்சருக்கு எதிரான விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டனர். மேனகா காந்தி மட்டும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே எம்.ஜே.அக்பரை பதவியை ராஜினாமா செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு பயணத்தில் உள்ள எம்.ஜே. அக்பர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பத்திரிகைகள் அனுப்பிய கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் இதில் வெளிப்படையாக கருத்தை பதிவு செய்துள்ள மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

”இவ்விவகாரம் தொடர்பாக அவர்தான் பதிலளிக்க வேண்டும். பெண் பத்திரிக்கையாளர்களுடன் உடன் நிற்கும் மீடியாக்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இது தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டியது அவரை சார்ந்தது. ஏனென்றால் சம்பவம் நடைபெற்ற போது நான் அங்கு கிடையாது.” என்று கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools