மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் – இன்று வாக்குப்பதிவு தொடங்கியது
மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளிலும், மிசோரமில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியதால், பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும். மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1.80 லட்சம் பேர் தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மிசோரம் மாநிலத்தை பொருத்தவரை அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த இரு மாநில தேர்தல்களின் வாக்குகளும் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் தெரியும். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அங்கு முகாமிட்டு சூறாவளி பிரசாரம் செய்தனர்.
மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் பாஜக தீவிர பிரசாரம் செய்திருக்கிறது. ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கட்சியின் மாநில தலைவர் கமல் நாத் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய பிரதேச மக்கள் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அப்பாவி மக்களை பாஜக நீண்ட காலம் சுரண்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.