X

மாருதி சுசுகியின் புட் ஹிய எர்டிகா கார்! – அமோக வரவேற்பு பெற்ற முன்பதிவு

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ.7.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாருதி எர்டிகா காருக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. பத்து வேரியன்ட்களில் கிடைக்கும் புதிய எர்டிகா டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாருதி சுசுகி புதிய எர்டிகா மாடலின் சி.என்.ஜி. வேரியன்ட்டை ஆறு மாதங்களுக்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மாருதி எர்டிகா வெற்றி பெற்ற பிராண்டு ஆகியிருக்கும் நிலையில், மேம்படுத்தப்பட்ட புதிய எர்டிகா முன்பதிவு துவங்கிய ஒரே வாரத்தில் சுமார் 10,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

முந்தைய எர்டிகா மாடலும் சி.என்.ஜி. வேரியன்ட் கொண்டிருந்தது. இந்த மாடலில் வழங்கப்பட்ட ஐ-ஜி.பி.ஐ. (இன்டெலிஜென்ட் கேஸ் போர்ட் இன்ஜெக்‌ஷன்) டூயல் என்ஜின் கன்ட்ரோல் யூனிட் காரின் செயல்திறனை பாதிக்காமல், அதிக மைலேஜ் வழங்க உதவியது. முந்தைய எர்டிகா சி.என்.ஜி. வேரியன்ட் லிட்டருக்கு அதிகபட்சம் 23 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

புதிய சி.என்.ஜி. வேரியன்ட் மூலம் மாருதி எர்டிகா விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 மாருதி எர்டிகா சி.என்.ஜி. அந்நிறுவனத்தின் SHVS மைல்டு-ஹைப்ரிட் 1.5-லிட்டர் K15 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும்.

புதிய எர்டிகாவின் சி.என்.ஜி. வேரியன்ட் குறைந்த செயல்திறன் வழங்கினாலும், அதிக மைலேஜ் வழங்கும். அதேபோன்று இதன் விலையும் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக சி.என்.ஜி. ஆப்ஷன் LXi மற்றும் VXi வேரியன்ட்களில் மட்டுமே வழங்கப்படும்.

புதிய 2018 எர்டிகா பெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) வேரியன்ட் லிட்டருக்கு 19.34 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அறிமுகமாக இருக்கும் சி.என்.ஜி. வேரியன்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்காது என கூறப்படுகிறது.