X

பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை – மன்மோகன் சிங்

கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை தடை செய்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

இந்த நடவடிக்கை அமல்படுத்தி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடக்கம் முதலே கண்டித்து வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இதையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

மோடி தலைமையிலான மத்திய அரசு துரதிர்ஷ்டவசமான, தவறான நோக்கமுடைய பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அமல்படுத்தி இன்றுடன் (நேற்று) 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த பேரழிவின் தாக்கம் இன்றும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை வயது, பாலினம், மதம், தொழில் மற்றும் இனம் என எந்தவித பாகுபாடுமின்றி ஒவ்வொரு தனிமனிதரையும் பாதித்தது. ஒவ்வொரு சோகத்துக்கும் காலமே சிறந்த மருந்து என அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பொறுத்தவரை, அது ஏற்படுத்திய காயங்களும், வடுக்களும் இன்னும் ஆறவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தின் மூலைக்கல்லாக விளங்கும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. பொருளாதாரம் தொடர்ந்து தத்தளித்து வருவதால் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.

எனவே மரபுகளை கடந்த, குறுகிய கால பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிச்சந்தையில் அதிக நிலைத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்தி விடும். எனவே நாட்டின் பொருளாதார கொள்கைகளையில் நிலைத்தன்மை மற்றும் தெளிவை மீட்டு எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

பொருளாதாரத்தில் ஏற்படும் துரதிர்ஷ்ட விளைவுகள் எப்படி நீண்டகாலத்துக்கு நாட்டை பாதிக்கும்? என்பதை நினைத்து பார்க்க வேண்டிய நாள் இது. அத்துடன் பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் சிந்தனையும், கவனமும் நிச்சயம் தேவை என்பதை உணர வேண்டிய தருணமும் இது.

இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.