Tamilசெய்திகள்

எதிர்காலத்தில் கடுமையான வெயில் பாதிப்புகளுக்கு உள்ளாகும் இந்தியா!

சூரிய ஒளி பூமியை நேரடியாக தாக்காமல் இருக்க பூமி கோளத்தை சுற்றி குடை போல ஓசோன் படலம் இருக்கிறது.

நாம் எரிக்கப்பயன்படுத்தும் பொருட்களால் கார்பன் வெளியேறி அவை ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகின்றன. இதனால் சூரிய வெப்பத்தின் தாக்குதல் பூமியில் அதிகமாகிறது. இது பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தி, பல்வேறு பாதிப்புகளை உருவாக்குகிறது.

பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்காக ஐ.நா.சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக ஐ.நா.சபையின் மேற்பார்வையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட பருவ நிலை மாற்றக்குழு செயல்பட்டு வருகிறது.

இந்த குழு பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பருவ நிலை மாற்றத்தை எப்படி கட்டுப்படுத்துவது? இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை இந்த குழு தயாரித்துள்ளது.

வருகிற டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் உள்ள கடோவைஸ் நகரில் பருவ நிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை இப்போது வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இந்தியாவை கடுமையான வெப்பம் தாக்கும் என்று அதில் கூறியுள்ளனர்.

ஏற்கனவே பருவநிலை மாற்றம் காரணமாக 2015-ம் ஆண்டு இந்தியாவை கடுமையான வெப்பம் தாக்கியது. அப்போது 2,500 பேர் உயிர் இழந்தனர். அதே போன்ற வெப்ப தாக்குதல் இனிமேல் இருக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கடந்த 150 ஆண்டில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழிற்சாலைகள் வந்த பிறகு அதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்களால் கார்பன் வெளியேறி இந்த மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

150 ஆண்டுகளில் டெல்லியின் வெப்ப நிலை 1 டிகிரி அதிகரித்து இருக்கிறது. மும்பையில் 0.7 டிகிரியும், கொல்கத்தாவில் 1.2 டிகிரியும், சென்னையில் 0.6 டிகிரியும் அதிகரித்து உள்ளன.

தொடர்ந்து நிலைமை மோசமாக இருப்பதால் 2030-ம் ஆண்டு வாக்கில் வெப்பநிலை மேலும் 1.5 டிகிரி அதிகரிக்கும் என்றும் பின்னர் 2052-க்குள் அதற்கு மேல் 1.5 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

எனவே வெப்ப நிலையை குறைப்பதுடன் 1.5 டிகிரிக்கு மேல் அதிகரித்து விடாமல் தடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய துணைக்கண்டத்தை பொறுத்தவரையில் கொல்கத்தா, கராச்சியில் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறுகின்றது. வெப்பநிலை 2 டிகிரி வரை அதிகரித்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற விவரங்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன் படி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கடுமையான வெப்பநிலை நிலவும். மலேரியா, டெங்கு போன்ற கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய்கள் பரவும். 2050-ம் ஆண்டு வாக்கில் 35 கோடி மக்கள் கடுமையாக பாதிப்புகளை சந்திக்க நேரிடும். விவசாய உற்பத்தி கடுமையாக பாதிப்படையும், இதனால் விலைவாசி உயர்வு, வறுமை, மக்கள் இடம் பெயர்வு போன்றவையும் நிகழும். கடலில் வெப்ப நிலை அதிகரித்து உயிர் இனங்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும். காடுகள் தீப்பற்றி எரியும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக பருவ நிலை மாற்றம் நிபுணர் ஆர்தர் வெயின்ஸ் கூறும் போது, பருவ நிலை மாற்றத்தால் பல கோடி மக்கள் உயிரிழப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.

வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் கார்பன் வெளியீடு 45 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறினார்கள். வெப்ப நிலை அதிகரிக்கும் போது தாவரங்கள் வளர முடியாத நிலை உருவாகியும், அரிசி, கோதுமை, மக்காச்சோளம் தானியங்கள் விளைய முடியாமல் கடும்பாதிப்பை ஏற்படும். இதனால் உணவு பற்றாக்குறையால் பஞ்சம் ஏற்படும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது.

ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜாய்ஸ்ரீராய் கூறும் போது, நிலக்கரியை மின் உற்பத்திக்கு அதிகமாக பயன்படுத்துவதால் கார்பன் வெளியீடு மிக அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் 92 கோடி டன் கார்பன்கள் அனல் மின்நிலையங்களில் நிலக்கரியை எரிப்பதன் மூலம் வெளியேறுகிறது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. மாசு ஏற்படாத மாற்று மின் உற்பத்திக்கு நாம் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *