அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆளுயர சிலை வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்களை பார்வையிட வருபவர்கள் தங்களது மனம் கவர்ந்த பிரபலத்தின் சிலை அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதுண்டு.
சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோருக்கு மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இங்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது.
இந்த மெழுகுச் சிலையில் கையில் ஒரு விலையுயர்ந்த கைபேசியும் இயங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனுஷ்காவின் கையில் உள்ள கைபேசி மூலமாகவே ‘செல்பி’ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் புதிய வசதியுடன் இந்த சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.