X

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு கருணாநிதி தான் காரணம் – அமைச்சர் கே.பி.முனுசாமி

காஞ்சீபுரம் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலங்கை ராணுவத்துக்கு உதவிய தி.மு.க.- காங்கிரசை கண்டித்து காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன். காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அமைப்பு செயலாளர்கள் வி.சாமசுந்தரம், மைதிலி, மீனவர் பிரிவு செயலாளர் எம்.சி.முனுசாமி, எம்.பிக்கள் மரகதம் குமரவேல், கே.என்.ராமச்சந்திரன், ஜெயவர்த்தன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி முன்னிலை வகித்தனர். அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

இலங்கையில் போர் நடந்த சமயம், அங்கு வாழும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற ஆயுதம் தாங்கிய போராளிகள் உருவானார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போது அந்த போராளிகள் தமிழர்களை காப்பாற்ற தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் போராடுவதற்கும் பயிற்சியை மேற்கொள்ள தமிழ்நாட்டை நாடினார்கள், அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஆதரவு கொடுத்தார்.

எம்.ஜி.ஆர். அரசியல் சட்டத்தை பற்றி கவலைப்படாமல், இறையாண்மையை பற்றி கவலைப்படாமல் தமிழ் குலம் எங்கிருந்தாலும் பாதுகாப்பு கொடுப்பேன் என்று அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார். இந்திய திருநாட்டில் யாரும் செய்யமுடியாத அளவிற்கு ரூ.4 கோடியை விடுதலை போராளிகளுக்காக வழங்கினார். மறைமுகமாக பல்வேறு உதவிகளை ஸ்ரீவிடுதலைப் போராளிகளுக்கு எம்.ஜி.ஆர். செய்தார்.

பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. 2008-2009ல் இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தது. விடுதலைப்போராளிகள் இலங்கையின் தாக்குதலை முறியடிக்க கொரில்லா தாக்குதல் செய்து வெற்றி பெற்றார்கள்.

இந்திய அரசு இலங்கை அரசுக்கு முறையாக ஆயுதம் வழங்காத வரை விடுதலை போராளிகள் வெற்றி பெற்றனர். அப்போது ராஜபக்சே மத்திய அரசை அணுகினார். இந்திய அரசிடம் உதவி கேட்டார். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு விமானங்களை, ஹெலிகாப்டர்களை, வட்டியில்லாத கடனாக கொடுத்தது.

அங்கு விடுதலைபுலிகளை சாய்ப்பதற்கும், இலங்கை தமிழர்களை அழிப்பதற்கும் இந்த உதவிகளை இந்திய அரசு வழங்கியது. இலங்கைக்கு நமது ராணுவ என்ஜினீயர்களை அனுப்பி வைத்தது. இந்த நிகழ்ச்சி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசுக்கு கொடுத்திருந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்க வேண்டும். மத்திய அரசை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்.

இலங்கையில் பதுங்கு குழியில் இருந்த தமிழ் பெண்கள், குழந்தைகள் வெளியே வந்தபோது இலங்கை அரசு போர் விமானங்களை அனுப்பி ஆயிரக்கணக்கான பேர்களை கொன்று குவித்தது. இதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளை தண்டிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. போராடிக் கொண்டிருக்கிறது.

தி.மு.க.வில் கருணாநிதி இல்லையென்றால் ஸ்டாலின் இல்லை. அதே போன்று ராமதாஸ் அரசியலுக்கு வந்ததால்தான் அன்புமணி வந்தார். ஆனால் அ.தி.மு.க.வில் விசுவாசம் மிக்க அடிமட்டத் தொண்டன் கூட பதவிக்கு வர முடியும். ஆனால் தி.மு.க. வாரிசு அரசியல் செய்கிறது. இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்து தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது கருணாநிதி மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருந்தார். ஏனென்றால் தி.மு.க. வினருக்கு பதவி மட்டுமே முக்கியம்.

தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த போது கருணாநிதி சென்னையில் உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார். சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு பின் மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி விட்டது. அங்கு போர் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே என்னுடைய உண்ணாவிரதத்தினை முடித்துக் கொள்கிறேன் என கூறி உண்ணாவிரத நாடகத்தினை முடித்துக் கொண்டார். இவருடைய வார்த்தையினை நம்பி பதுங்கு குழியில் இருந்த பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் வெளியே வந்த போது தரை வழியாகவும் வான் வழியாகவும் இலங்கை தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றது.

இப்படி காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க. செய்த துரோகத்தினை கடந்த வாரம் ராஜபக்சே அம்பலப்படுத்தினார். ஆட்சியினை தக்க வைக்க தமிழர்களின் தன்மானத்தினை விலையாகக் கொடுத்தவர் தான் கருணாநிதி. இன்று ஸ்டாலின் அ.தி.மு.க.வைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவர்கள் எனக் கூறுகிறார். தன்மானத்தோடு ஆட்சி செய்பவர்கள் நாங்கள். ஆனால் உங்கள் கட்சி அலுவலத்திலேயே சோதனை நடத்திய காங்கிரஸ் கட்சியோடு பதவி சுகத்திற்காக இன்றும் கூட்டணி வைத்துள்ள கட்சிதான் திமுக. எங்களைக் குறை சொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், மாவட்ட அவைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்குமார், பெரும்பாக்கம் ராஜசேகர், நிர்வாகிகள் தும்பவனம் ஜீவானந்தம், காஞ்சி பன்னீர் செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜ், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, டபிள்யூ.பி.ஜி.சரவணன், கரூர் மாணிக்கம், பாலாஜி. ஜெயராஜ் கலந்து கொண்டனர்.

Tags: ADMKDMK