Tamilவிளையாட்டு

கோலியை வியப்பில் ஆழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி ‘டை’யில் முடிந்தது.

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்தது. கேப்டன் விராட்கோலி 129 பந்தில் 157 ரன்னும் (13 பவுண்டரி 4 சிக்சர்), அம்பதி ராயுடு 80 பந்தில் 73 ரன்னும் எடுத்தனர். மெக்காய், ஆஸ்லே நர்ஸ் தலா 2 விக்கெட் கைபற்றினார்கள்.

322 ரன் இலக்குடன் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆடியது. ஒரு கட்டத்தில் அந்த அணி எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

ஹோப், ஹெட் மயரின் அதிரடியான ஆட்டம் அந்த அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றது. கடைசி கட்டத்தில் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பரபரப்பான இந்த போட்டி ‘டை’யில் முடிந்தது. ஹோப்பின் பவுண்டரியால் ‘டை’ ஆனது.

வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்தது. ஹோப் 134 பந்தில், 123 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயர் 64 பந்தில் 94 ரன்னும் (4 பவுண்டரி 7 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், முகமது‌ஷமி, உமேஷ் யாதவ், யசுவேந்திர சகால் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்தப் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த போட்டி மிகவும் பிரமாதமாக இருந்தது. வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் போராட்டம் என்னை வியக்க வைத்தது. அவர்களது போராட்ட குணம் என்னை மிகவும் கவர்ந்தது. இதே போல அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.

வெஸ்ட்இண்டீஸ் முதல் 3 விக்கெட்டுகளை இழந்தாலும் ஹோப், ஹெட்மயர் ஆட்டம் பிரமிக்க வைத்தது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தொடக்கத்தில் ரன்கள் விட்டு கொடுத்தாலும் இறுதியில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அம்பதிராயுடு மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். 4-வது வீரராக அவர் தொடர்ந்து களம் இறக்கப்படுவார்.

தனிப்பட்ட முறையில் எனது ஆட்டமும், சாதனையும் பெருமை அளிக்கிறது.

இவ்வாறு கோலி கூறியுள்ளார்.

5 போட்டிக் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஒருநாள் போட்டி வருகிற 27-ந்தேதி புனேவில் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *