இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் 2 வாரங்கள் வரை மட்டுமே தங்களது மனைவி அல்லது காதலியை தங்களுடன் தங்கவைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் புதிய விதியை அமல்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விதியை மாற்றி, வெளிநாட்டில் விளையாடும் போது, அந்த தொடர் நிறைவடையும் வரை தங்களுடன் மனைவி மற்றும் குடும்பத்தாரை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வீரர்கள் சார்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தரப்பில் கேட்ட போது, ‘வெளிநாட்டு பயணத்தின் போது தொடர் முடிவடையும் வரை மனைவியை உடன் வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோலி கோரிக்கை வைத்துள்ளது உண்மை தான். ஆனால் அது குறித்து தற்சமயம் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு அவர்களின் முடிவுக்கு விட்டுவிடப்போகிறோம்.
அதனால் ஏற்கனவே உள்ள விதிமுறையில் இப்போது எந்த மாற்றமும் இருக்காது’ என்று தெரிவிக்கப்பட்டது.இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த வெளிநாட்டு பயணம் நவம்பர் 21-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி 20 ஓவர் போட்டி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.