ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி கடந்த 8-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்ட 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வெறும் 8.3 சதவீத வாக்குகளே பதிவாகின.
இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 13 மாவட்டங்களில் உள்ள 384 வார்டுகளில் (காஷ்மீரில் 166, ஜம்முவில் 218) தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வார்டுகளில் மொத்தம் 1094 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் காஷ்மீரில் 61 வேட்பாளர்கள் உள்ளிட்ட 65 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 56 வார்டுளில் யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யாததால் அந்த வார்டுகளில் தேர்தல் நடத்தப்படவில்லை. மற்ற வாக்குச்சாவடிகளில் காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட தேர்தலைப் போன்றே இன்றும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் குறைந்த அளவு வாக்காளர்களே வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 13 மாவட்டங்களிலும் செல்போன் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
முக்கிய கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் தேர்தலை புறக்கணித்திருப்பதுடன் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.