Tamilசெய்திகள்

எம்.எல்.ஏ. கருணாஸின் பின்னணியில் நான் இல்லை – டிடிவி தினகரன்

சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபம் வளாகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:

விவசாயிகளை பாதிக்கும் எந்தவித திட்டத்துக்கும் ஜெயலலிதா வழியில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். விவசாயம் லாபகரமாக கொண்டு வர வேண்டிய அரசாங்கங்கள், விவசாயத்தை அழித்து தமிழ்நாட்டை சோமாலியாவாக ஆக்குவதற்கு முயற்சிகளை செய்து வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்களை பாதிக்கின்ற திட்டம்.

அரசியல்வாதியாக சொல்லவில்லை. நானும் அந்த டெல்டா பகுதியை சேர்ந்தவன் என்பதால் சொல்கிறேன். மாநில அரசு மக்களோடும், எதிர்க்கட்சிகளோடும் சேர்ந்து இந்த திட்டத்தை வரவிடாமல் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம். கருணாஸ் ஜெயலலிதாவால் கூட்டணியில் கொண்டுவரப்பட்டவர். எங்களுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.. கருணாஸ் பின்னணியிலும், முன்னணியிலும் நான் இல்லை. சசிகலா மீது உள்ள அன்பிலும், ஆதரவிலும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்.

கருணாசை வைத்து நான் சதித்திட்டம் தீட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். சாதி ரீதியாக கருணாஸ் எங்களுக்கு ஆதரவு இல்லை. அரசியல் ரீதியாக கருணாஸ் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார். சேகுவாரா, பிடல்காஸ்ட்ரோவை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரோடு ஒப்பிட்டு பேசுவது பெருந்தலைவர்களுடன் பெருச்சாளிகளை ஒப்பிட்டு பேசுவதற்கு சமம். ஆட்சி முடிந்து தேர்தல் வரும்போது இவர்களுக்கு பாடம் சொல்வேன்.

கூவத்தூரில் சசிகலாவும், நானும் இருந்தவரை பேரம் எதுவும் நடக்கவில்லை. அதற்கு பின்பு என்ன நடந்தது என்பதை கருணாஸ் சொன்னால் தான் தெரியும். நானும், சசிகலாவும் எந்த பணப்பேரமும் பேசவில்லை. எம்.எல்.ஏ.க்கள் எங்கள் மீது உள்ள மரியாதையில் ஜெயலலிதா ஆட்சி அமைக்க வேண்டும் என்று அங்கு ஒன்றாக இருந்தார்கள். எங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. நாங்கள் எதிலும் மாட்டிக்கொள்ளவும் மாட்டோம். எங்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்து இருக்கலாம்.

ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வோடு சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்-அமைச்சர் ஆகலாம் என்று கனவு கண்டுகொண்டு சுற்றிக்கொண்டு இருக்கிறார். இப்போது கூட எனக்கு ஆட்களை அனுப்பி எங்களோடு சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிடலாம் என்று சொல்லி பார்க்கிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுத்தது நான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *