நவம்பர் 15 ஆம் தேதி கருணாநிதி சிலை திறப்பு – சோனியா காந்தி பங்கேற்பு
முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ந்தேதி மரணம் அடைந்தார்.
அவருக்கு தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முழு உருவ வெண்கல சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.
கருணாநிதி மறைந்து வருகிற நவம்பர் 15-ந்தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. அன்று கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.
8 அடி உயரமுள்ள கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை பொன்னேரியில் உள்ள சிற்பி தீனதயாளன் வடிவமைத்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு சிலை வடிவமைப்பு பணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய சில மாற்றங்களுடன் சிலை தயாராகி வருகிறது.
கருணாநிதி சிலையை திறந்து வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, கருணாநிதி சிலையை திறக்க சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். சோனியாகாந்தி கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, கேரள முதல்வர் பினராய் விஜயன், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர்களின் ஒருவரான தேஜஸ்வியாதவ் உள்ளிட்டோரை அழைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.