அண்ணா அறிவாலய வளாக்தில் கருணாநிதி சிலை – மாநகராட்சி அனுமதி

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் 8 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி கருணாநிதி சிலை வடிவமைக்கும் பணி திருவள்ளூர் மாவட்டம் புதுப்பேடு கிராமத்தில் வசிக்கும் பிரபல சிற்பி தீனதயாளனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது கருணாநிதி சிலை வடிவமைக்கப்பட்டு, இறுதி வடிவம் பெற்றுள்ளது.

கருணாநிதியின் சிலையை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் நிறுவுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடம் பெருநகர சென்னை மாநகராட்சியின் திறந்தவெளி நிலம் (ஓ.எஸ்.ஆர். லேண்ட்) என்பதால், மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற வேண்டும். எனவே தி.மு.க. சார்பில் அனுமதி கேட்டு மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அண்ணா அறிவாலய வளாகத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்கு மாநகராட்சி நிபந்தனையுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. அதாவது, தற்போது கருணாநிதி சிலையை வைத்துக்கொள்ளலாம். எதிர்க்காலத்தில் சாலை விரிவாக்கத்துக்காக அந்த நிலம் தேவைப்படும்பட்சத்தில், சிலை அகற்றப்படும் என்று நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி சிலை திறப்பு விழாவை அவர் மறைந்து 100-வது நாளான வருகிற நவம்பர் 15-ந் தேதி பிரமாண்டமாக நடத்துவதற்கு தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சிலை திறப்பு தேதி குறித்து, ‘நானே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools