நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 16-ந்தேதி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே அந்த வழக்கிலும் ஜாமீன் கோரி கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நேற்று பரிசீலித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த ஜாமீன் உத்தரவு நகல் வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சிறை நடைமுறைகள் முடிந்து, கருணாஸ் எம்எல்ஏ இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் மீதான வழக்குகளில் உண்மை நின்றது, நீதி வென்றது என்றார்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் கருத்து தெரிவித்ததால் தன் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இதுபோன்று ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்றும் கூறினார்.