கர்நாடக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணியாற்றும் சலுகையை வழங்க வேண்டும், என்று அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் முதல்வர் குமாரசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அரசு ஊழியர்களின் வேலை பளு அதிகமாக உள்ளது. அரசு அலுவலகங்களில் ஏராளமான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
இதற்கு முன்பு ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றினால் போதும் என்ற முடிவுக்கு வந்தார். அதன்படி, அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றினால் போதும் என்பதை அமல்படுத்தி செயல்படுத்தினார்.
அப்போது அரசு ஊழியர்கள் சிறப்பாகவும், ஊக்கமாகவும் பணியாற்றினார்கள். கோப்புகள் தேங்காமல் பார்த்து கொண்டனர். நாளடைவில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றும் நடைமுறைகள் மாற்றப்பட்டு, 6 நாட்கள் பணியாற்றியே தீர வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போதும் அது தொடருகிறது.
இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றினால் போதும் என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற விடுமுறைகள் வழங்கக்கூடாது. வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இதனை முதல்-மந்திரி குமாரசாமி தனது ஆட்சியில் அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.