Tamilசெய்திகள்

கர்நாடக தசரா விழா இன்று தொடங்கியது

கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழாவாகும். இந்த ஆண்டு மழையால் குடகு, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்தது.

அதன்படி மைசூரு அருகே சாமுண்டி மலையில் குடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் இன்று காலை மைசூரு தசரா விழா தொடங்கியது. சிறப்பு பூஜை செய்து தசரா விழாவை கர்நாடக முதல்வர் குமாரசாமி, இன்போசிஸ் அறக்கட்டளை தலைவியும், எழுத்தாளருமான சுதாமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தசரா விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மைசூரு அரண்மனையில் தர்பார் நடக்கிறது. இதில் தங்க சிம்மாசனத்தில் இளவரசர் யதுவீர் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார். இந்த தர்பார் விழா நிறைவடையும் 19-ந்தேதி வரை நடக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க தசரா விழாவையொட்டி மைசூரு நகர் முழுவதும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவில் மைசூரு நகர் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மைசூருவுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *