கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 104 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இதனால் ஆபரேஷன் தாமரை மூலமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டது. ஆனால் ஆபரேஷன் தாமரை மூலம் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாமல் பா.ஜனதா தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், இடைத்தேர்தல் முடிந்த பின்பு கர்நாடகத்தில் பெரிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே மோதல் உருவாகி ஆட்சி கலைந்து விடும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். மேலும் இடைத்தேர்தல் முடிந்த பின்பு மீண்டும் ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:
“பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கலைந்து விடும் என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு பல முறை ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா போட்ட திட்டங்கள் தோல்வியில் முடிந்தது. இதனால் கர்நாடக பா.ஜனதா கோமா நிலைக்கு சென்றுவிட்டது. எனவே மீண்டும் ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதா நினைக்க வேண்டாம்.
ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைப்பதை விட்டுவிட்டு சிறந்த எதிர்க்கட்சியாக பா.ஜனதா செயல்படுவது நல்லது. ஜனநாயகத்தில் இதுவே சிறந்ததாகும்.“ இவ்வாறு பா.ஜனதா மற்றும் எடியூரப்பாவை தாக்கி சித்தராமையா கருத்து பதிவிட்டுள்ளார்.