கமல் மீது குற்றம் சாட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி!

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள தேர்தலுக்காக தமிழகத்தில் இப்போதே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன.

ராகுல் தலைமையிலான காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது “மக்கள் நீதி மய்யம்” கட்சி பாராளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கடந்த வாரம் அறிவித்தார். அந்த கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி உள்பட சில கட்சிகள் இடம் பெறும் என்று தகவல்கள் வெளியானது.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ்- கமல் ஹாசன் அமைக்கும் கூட்டணியில் தி.மு.க. இடம் பெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. திட்ட மிட்டு இருப்பதால் தி.மு.க.விடம் இருந்து விலகி, மற்ற கட்சிகளை அரவணைத்து மெகா கூட்டணியை உருவாக்கவே காங்கிரசும் விரும்புவதாக கூறப்படுகிறது.

கூட்டணிக்காக கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள முயற்சியை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் கொடுத்த இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு முதன் முதலாக கூட்டணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த முயற்சியின் பின்னணியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் சதி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் திட்டமாகும். அதை ஏன் கமல்ஹாசன் ஆதரிக்கிறார்?

இவ்வாறு ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டில் 30 முதல் 35 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளது. வரும் தேர்தல்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. எனவே மக்கள் மத்தியில் கமல்ஹாசனுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பது யாருக்கும் தெரியாது.

தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற சற்று கூடுதல் வாக்குகள் தேவையாகும். அந்த வாக்குகள் காங்கிரசிடம் உள்ளது.

காங்கிரஸ் வாக்குகள் கிடைக்காதபட்சத்தில் தி.மு. க.வால் அதிக இடங்களில் வெற்றி பெற இயலாது. எனவே நடிகர் கமல்ஹாசன் தற்போது மேற்கொண்டுள்ள முயற்சிகள் தி.மு.க.வை பலவீனப்படுத்தும் வகையிலேயே அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools