ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா – விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி’. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
`ஒவ்வொரு வாரமும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசைக் கட்டியிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு படம் ரிலீசாகும். படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளனர்.