காற்றின் மொழி- திரைப்பட விமர்சனம்
திருமணத்திற்குப் பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகாவின் நடிப்பில், ராதாமோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘காற்றின் மொழி’ எப்படி என்பதை பார்ப்போம்.
இந்தியில் வெற்றிப் பெற்ற ‘தூமாரி சூலு’ என்ற படத்தின் ரீமேக் தான் இந்த ‘காற்றின் மொழி’ என்றாலும், இதை நாம் தமிழ்ப் படமாக மட்டுமே பார்ப்போம்.
அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஜோதிகா. ஆடை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் கணவர், 11 வயது மகன், என்று மூவர் கொண்ட இந்த குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவராக இருக்கும் இல்லத்தரசியான ஜோதிகாவுக்கு திடீரென்று எப்.எம் ரேடியோவில் ஆர்.ஜே வேலை கிடைக்கிறது. அர்த்த ராத்திரியில் அப்படி…இப்படி…என்று பேசினாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு பேச வேண்டிய நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிகா ஆர்.ஜே-வாக பணியாற்றுகிறார். அவர் அந்த பணியை விருப்பப்பட்டு செய்தாலும், அவரது கணவர், சகோதரிகள், அப்பா என குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால், குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு குடும்பத்திற்காக உழைப்பது மட்டுமே பெண்களின் வேலை, என்பதையும் மீறி சாதிக்க துடித்து, சாதிக்கும் நேரத்தில், பிள்ளை வளர்ப்பு, கணவரை கவனிப்பது போன்ற விஷயங்களால், தனது முன்னேற்றத்திற்கு, தனது குடும்பமே முட்டுக்கட்டை போட, ஜோதிகா மீண்டும் இல்லத்தரசியாக அடுப்பாங்கரையே கெதி என்று கிடந்தாரா அல்லது முட்டுக்கட்டைகளை முட்டி தள்ளி தனது பாதையில் முன்னேறினாரா, என்பதே ‘காற்றின் மொழி’ படத்தின் கதை.
மசாலாத்தனங்களைக் கலக்காமல் கதையையும், திரைக்கதையையும் எதார்த்தமாக கையாளும் இயக்குநர் ராதாமோகன், பிற மொழி படத்தை ரீமேக் செய்தாலும், அதிலும் மசாலத்தனத்தை தவிர்த்துவிட்டு இயல்பாகவே திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.
ஜோதிகா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தாலும், பல இடங்களில் ஓவர் டோசஜ் நடிப்பையே கொடுக்கிறார். படம் முழுவதையும் தனது பேச்சாலே நகர்த்தி செல்வதால், வசன உச்சரிப்பிலும், முக எக்ஸ்பிரஷன்களிலும் அதீத கவனம் செலுத்தியிருப்பவர், கொஞ்சம் அதிகமாக எக்ஸ்பிரஷன்களை கொடுத்திருக்கிறார்.
ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கும் விதார்த், தனது வேலையை சரியாக செய்திருப்பது போல, இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறார்.
ரேடியோ ஸ்டேஷனின் ஹெட்டாக நடித்திருக்கும் லக்ஷ்மி மஞ்சுவின் தேர்வு பர்ப்பெக்ட்டாக இருப்பதோடு, அவரது நடிப்பும் பர்ப்பெக்ட். அவருடன் ராதாமோகனின் ரெகுலர் நடிகர்களான குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரம் அசத்தியிருக்கிறார்கள்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் பெண்களுக்கான படமாக மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்கும் படமாக இயக்குநர் ராதாமோகன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஜோதிகாவின் துறுதுறுப்பான நடிப்போடு, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோரது காமெடிக் காட்சிகளும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும், மயில்சாமி மாடி ஏறும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கமே குலுங்கு குலுங்கி சிரிக்கிறது. இப்படி அவ்வபோது பல இடங்களில் சிரிப்பு வெடியை கொளுத்தி போட்டிருக்கும் இயக்குநர் ரதாமோகன், சில இடங்களை நாடகத்தனமாக நகர்த்தியிருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது.
மொத்தத்தில், இந்த ‘காற்றின் மொழி’ ஜோதிகாவின் மொழியாக இருந்தாலும் ரசிக்கும்படியான மொழியாகவே இருக்கிறது.
-ஜெ.சுகுமார்