ஜூனியர் ஆசிய கிரிக்கெட் போட்டி – அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 45.3 ஓவர்களில் 221 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. யஷாஸ்வி ஜெய்ஸ்வால் (92 ரன், 93 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), அயுஷ் படோனி (65 ரன்) அரைசதம் விளாசினர்.
அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரமனுல்லா குர்பாஸ் (37 ரன்), ரியாஸ் ஹூசைன் (47 ரன்) ஆகியோர் நல்ல தொடக்கம் அளித்த போதிலும் அடுத்து வந்த வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த அணி 45.4 ஓவர்களில் 170 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் சித்தார்த் தேசாய் 4 விக்கெட்டுகளும், ஹர்ஷ் தியாகி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் (பி பிரிவு) பாகிஸ்தானை சாய்த்தது.
லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா (6 புள்ளி), ஆப்கானிஸ்தான் (4 புள்ளி), ‘பி’ பிரிவில் இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. பாகிஸ்தான் அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போல் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் அணிகளும் நடையை கட்டின.
டாக்காவில் நாளை நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. 5-ந்தேதி நடக்கும் 2-வது அரைஇறுதியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. 7-ந்தேதி இறுதிப்போட்டி அரங்கேறுகிறது.