X

பத்திரிகையாளர் கொலை – சவுதி அரேபியாவை எச்சரித்த டிரம்ப்

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதற்கிடையே, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்படும் வீடியோ வெளியாகி உள்ளதாக துருக்கி அரசு நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் அது மிகவும் துயரமானது. சவுதி அரேபியா அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.