சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பேரணியை மாநகரக் காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் நடிகர் ‘தாடி’ பாலாஜி, நடிகை ஜனனி மற்றும் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின்போது மீ டூ விவகாரம் குறித்து ஜனனியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது அவர் கூறியதாவது, “மீ டூ விவகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல், செய்தி மற்றும் விளம்பரத்துக்காக மட்டுமல்லாமல் நல்ல விஷயத்துக்காக உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
சினிமா துறையில் மட்டுமில்லாமல் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவுகள் உள்ளன. நிறைய பெண்கள் அவர்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை வெளியில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
சினிமா துறையில் வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காலம் கடத்தாமல் உடனே தெரிவிக்க வேண்டும். உடனடியாக வெளியே சொன்னால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க முடியும்” என்றார்.