Tamilவிளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து – பெங்களூர் அணியிடம் தோல்வியுற்ற சென்னை அணி!

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி.யை சந்தித்தது. இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியை கடைபிடித்தன. 19-வது நிமிடத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா பந்துடன் இலக்கை வெகுவாக நெருங்கினார். அவர் தைரியமாக வலையை நோக்கி பந்தை உதைத்திருக்க வேண்டும். அதை விடுத்து கம்பம் அருகில் நின்ற சக வீரர் ஜெர்மன்பிரீத்சிங் நோக்கி அடிக்க, பந்து வெளியே ஓடி வாய்ப்பு வீணானது. இதே போல் 33-வது நிமிடத்தில் மற்றொரு வாய்ப்பையும் லால்பெகுலா நழுவ விட்டார்.

41-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. சக வீரர் ஸிஸ்கோ தட்டிக்கொடுத்த பந்தை, மிகு சூப்பராக அடித்து கோலாக்கினார். இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பெங்களூரு அணி அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது.

பந்து அதிக நேரம் (56 சதவீதம்) சென்னை வீரர்கள் வசமே சுற்றிக்கொண்டிருந்தது. ஷாட்டுகள் அடிப்பதிலும் எதிரணியை விட (9 முறை) சென்னையின் கையே ஓங்கி இருந்தது. ஆனால் பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் சென்னையிடம் அடைந்த தோல்விக்கும் அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது.

கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி- கோவா அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *