X

அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்து இரட்டை சகோதரிகள் ஓய்வு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ‘பி’ பிரிவில் நடந்த கடைசி லீக்கில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை துவம்சம் செய்த திருப்தியுடன் வெளியேறியது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை நியூசிலாந்து அணி 7.3 ஓவர்களில் எட்டியது. இந்த ஆட்டத்துடன் அயர்லாந்து இரட்டை சகோதரிகள் 35 வயதான சிசிலியா ஜாய்ஸ், இசோபெல் ஜாய்ஸ் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

தனது கடைசி ஆட்டத்தில் ஒரு ரன்னில் கேட்ச் ஆன சிசிலியா மொத்தத்தில் 43 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி 659 ரன்கள் எடுத்துள்ளார். இதே போல் ரன் ஏதுமின்றி வீழ்ந்த இசோபெல் 55 ஆட்டங்களில் ஆடி 944 ரன்கள் சேர்த்து இருக்கிறார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த ஒரே அயர்லாந்து வீராங்கனையான 37 வயதான கிளார் ஷில்லிங்டன், சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான சியாரா மெட்கால்ப் ஆகியோரும் இதுவே தங்களது கடைசி சர்வதேச போட்டி என்று ஏற்கனவே கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.