இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 30 பேர் பலி!
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்ப பெறப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமியில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்தபாகவும் உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. ஆங்காங்கே மனித உடல்கள் காணப்படுவதால் உயிரிழப்பு அதிக அளவில் இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. சுனாமி பாதித்த பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை.
டோங்காலா மற்றும் பாலு நகரங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.