வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி – 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.
ரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) ஆகியோரின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.
ஹேம்ராஜ், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹேம்ராஜ் 14 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் வெளியேறினார். அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார். 2-வது மற்றும் 3-வது போட்டியில் அச்சுறுத்திய ஷாய் ஹோப்பை ஸ்டன்னிங் ரன்அவுட்டால் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். அத்துடன் தொடக்க வீரர் பொவேலை விராட் கோலி ரன்அவுட் மூலம் வெளியேற்றினார்.
இதனால் 20 ரன்கள் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு சாமுவேல்ஸ் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 25 ரன்கள் வரை தாக்குப்பிடித்தது. 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹெட்மையர் எல்பிஎடபிள்யூ மூலம் வீழ்த்தினார் கலீல் அஹமது. அத்துடன் மட்டுமல்லாமல் ஆர் பொவேல் (1), சாமுவேல்ஸ் (18) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் 56 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியால் மீண்டு வர இயலவில்லை. கேப்டன் ஜேசன் ஹோல்டர் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் 100-ஐத் தாண்டியது.
ஜேசன் ஹோல்டர் 61 பந்தில் அரைசதம் அடித்தார். 37-வது ஓவரின் 2-வது பந்தில் ரோச் 6 ரன்களில் க்ளீன் போல்டு ஆக வெஸ்ட் இண்டீஸ் 153 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. குல்தீப் யாதவ், கலீல் அஹமது தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.