X

வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – இந்தியா வெற்றி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று கவுகாத்தியில் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் குவித்தது. ஹெட்மயர் (106 ரன்) சதம் அடித்தார். சாஹல் 3 விக்கெட்டும், ஜடேஜா, முகமது சமி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் விராட்கோலி- ரோகித் சர்மா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 246 ரன் குவித்து வெற்றியை எளிதாக்கியது.

இந்தியா 42.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித்சர்மா 152 ரன்னும், விராட்கோலி 140 ரன்னும் எடுத்தனர்.

வெற்றி குறித்து கேப்டன் விராட்கோலி பேசும்போது, ரோகித்சர்மாவை பாராட்டினார். அவர் கூறியதாவது:-

இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு முழு திருப்தி அளிக்கும் வெற்றியாகும். வெஸ்ட்இண்டீஸ் சவாலான இலக்கை நிர்ணயித்தது.

323 ரன் இலக்கை ஜாக்கிரதையாக அணுக வேண்டியது அவசியமாகும். இதற்கு மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் தேவை என்பதை அறிவோம்.

ரோகித் சர்மா மறுமுனையில் இருக்கும்போது பெரிய ரன் இலக்கை எடுப்பது என்பது எளிதானது. டாப் 3 வீரர்களில் நான் நிலைத்து நின்று கடைசி வரை விளையாட விரும்புவேன்.

ஏனென்றால் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அதிரடியாக விளையாட கூடியவர்கள். ஆனால் இந்த போட்டியில் நான் அடித்து ஆட முடிவு செய்து ரோகித்சர்மாவை உறுதுணையாக நின்று விளையாடு என்று கூறினேன்.

நான் அவுட் ஆன பிறகு ரோகித்சர்மா அதிரடியாக விளையாடினார். ரோகித் சர்மாவுடன் இது 5 அல்லது 6-வது இரட்டை சதம் பார்டனர்ஷிப் ஆகும்.

ரோகித்துடன் இணைந்து விளையாடுவதை எப்போதும் மகிழ்ச்சியாகவே கருதுகிறேன். இதனால் அணிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிவோம்.

பந்து வீச்சாளர்களை குறை கூற முடியாது. இந்த பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் வெஸ்ட்இண்டீஸ் அடித்து ஆடும்போது கட்டுப்படுத்துவது கடினம். அதனால் பந்து வீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

இந்த கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட இன்னும் சில ஆண்டுகள் என் கணக்கில் உள்ளன. நாட்டுக்காக விளையாடுவது என்பது அரிதானது. அப்படியுள்ள சூழ்நிலையில் எந்த ஒரு போட்டியையும் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.