வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 போட்டி – இந்தியா வெற்றி
இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷாய் ஹோப்பும், ஷிம்ரோன் ஹெட்மையரும் அதிரடியாக ஆடியதால் 6 ஓவரில் அந்த அணி 50 ரன்களை எடுத்தது.
இவர்கள் இருவரையும் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் பிரித்தார். இதனால் அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது.
அடுத்து இறங்கிய டேவன் பிராவோ பொறுப்புடன் ஆடினார். இவருக்கு நிகோலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சற்று நேரம் பொறுமையாக ஆடிய இவர்கள் தங்களது அதிரடியை தொடர்ந்தனர். நிகோலஸ் பூரன் 4 சிக்சர்கள் அடித்து ஆட்டத்தை உற்சாகமாக்கினார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. டேரன் பிராவோ 43 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் 25 பந்தில் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கமாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இறங்கினர்.
ரோகித் சர்மா 4 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அப்போது அணியின் எண்ணிக்கை 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது..
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் முதலில் நிதான ஆட்டத்தை ஆடினார். தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் இவருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். 19வது ஓவரில் ரிஷப் பந்த் 38 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். தவான் – பந்த் ஜோடி 130 ரன்கள் சேர்த்து அசத்தியது. ஷிகர் தவான் 62 பந்துகளில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுடனான டி20 தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.