X

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற வினோதமான தீபாவளி வழிபாடு!

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தென் மாநிலங்களில் 6-ம் தேதியும், வட மாநிலங்களில் 7-ம் தேதியும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் வெளிநாடுகளிலும் உள்ள இந்துக்களும் இப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக தீபாவளியை முன்னிட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள தாமி என்ற கிராமத்தில், தீபாவளியையொட்டி வினோதமான ஒரு வழிபாடு நடத்தப்படுகிறது. தலைநகர் சிம்லாவில் இருந்து 26 கிமீ தொலைவில் இந்த கிராமத்தில், மக்களின் காவல் தெய்வமான காளி தேவியின் உக்கிரத்தை தணிக்கும் வகையில், பாரம்பரியமாக இந்த பூஜை நடத்தப்படுகிறது.

அதாவது, கிராமத்தின் இரண்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கற்களை வீசி தாக்கிக்கொள்வார்கள். அதில் முதலில் காயமடையும் நபர் துணிச்சல் மிக்கவராக கருதப்படுகிறார். அத்துடன், அவர் தன் ரத்தத்தை காளியின் நெற்றியில் திலகமாக பூசுவார். இந்த ஆண்டு தாமி கிராமத்தில் நேற்று கல்வீச்சு சடங்கு நடந்தது. இதில், 28 வயது வாலிபர் சுராஜ் முதலில் காயமடைந்ததால், அவர் தனது ரத்தத்தினால் காளிக்கு திலகமிட்டார். அப்போது கிராம மக்கள் அனைவரும் காளிதேவியை வணங்கி வழிபட்டனர்.

இந்த வினோதமான கல்வீசி தாக்கும் சடங்கில் பங்கேற்ற மேலும் சிலர் காயமடைந்தனர். அனைவருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த வழிபாடு ஆபத்து நிறைந்ததாக இருந்தபோதிலும், மக்களின் வலுவான கடவுள் நம்பிக்கைக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.