X

கனமழை எச்சரிக்கை – சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சமீபத்தில் ‘கஜா’ புயல் டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் நல்ல மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் கடந்த 18-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும், தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக வருகிற 23-ந்தேதி வரை(இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். வட தமிழகத்தில், அதாவது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்றும்) மழை தொடரும்.

காற்றின் வேகம் அதிகமாகி மேகக்கூட்டங்கள் கலைந்து சென்ற காரணத்தினால் வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இல்லை. அது தற்போது வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து தமிழக பகுதிகளில் மெதுவாக நகரும்.

வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் வழியாக உள்ளே வந்து, உள் தமிழகத்தில் கடந்து செல்ல இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 22-ந்தேதி (இன்று) பரவலாகவும், 23-ந்தேதி (நாளை) மிதமாகவும் மழை பெய்யும். கஜா புயல்-2 என்று வரும் தகவல் புரளி. கஜா-2, கஜா-3 என்று எதுவும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர் மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை(இன்று) மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்ததந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

புதுச்சேரியிலும் மழை பெய்தது. மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.