பெண் இயக்குநர் லீனா மணிமேகலை மீது போலீசில் புகார் அளித்த இயக்குநர் சுசி கணேசன்!

திருட்டு பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்திருப்பவர் இயக்குனர் சுசிகணேசன். இவர் மீது பெண் இயக்குனரான லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து டைரக்டர் சுசி கணேசன் விளக்கம் அளித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘அருவருப்பான உங்கள் பொய் என்னை நிலை குலைய செய்து விட்டது. இந்த உலகம் போக்கிரிகளுக்கும் பொறுக்கிகளுக்கும் உகந்தது என்பதை நிரூபித்துவிட்டீர்கள். உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால் ஒரு வேளை இந்த பழியில் இருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ’’ என்று கூறி இருந்தார்.

லீனா மணிமேகலை எனது கற்பை சூறையாடி இருக்கிறார். என் குடும்பம் வேதனையோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட்டு மூலமாக கழுவும் வரையில் எந்த பக்கமும் சாய்ந்து விடாமல் காத்திருங்கள் என்றும் சுசிகணேசன் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த லீனா, சுசிகணேசனிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாகவும், எதையும் சந்திக்க தான் தயாராக இருக்கிறேன் என்றும் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் சுசி கணேசன், லீனா மணிமேகலை மீது போலீசில் புகார் அளித்ததுடன், கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார். கிண்டியில் வசித்து வரும் சுசிகணேசன், பரங்கிமலை உதவி கமி‌ஷனருக்கு ஆன்லைன் மூலமாக புகார் அனுப்பி உள்ளார்.

அதில் ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சுமத்திய லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுசிகணேசனின் வக்கீல் சங்கமித்திரை, சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார். அதில் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை கூறிய லீனா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி லீனா மீது மானநஷ்ட வழக்கு தொடரவும் சுசிகணேசன் திட்ட மிட்டுள்ளார். நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் தர வேண்டும் என்று உத்தரவிட கோரி திங்கட்கிழமை மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.

பாலியல் விவகாரத்தில் பல்வேறு பிரபலங்கள் சிக்கி வரும் நிலையில், யாரும் இதுவரையில் புகார் அளிக்கவில்லை.

இந்த நிலையில் சுசி கணேசன், தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் முதல் ஆளாக போலீசில் புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools