Tamilசெய்திகள்

துணி, சணல் பை எடுத்து வரும் பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி பரிசு – திருவண்ணாமலை கோவில் நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத்திருவிழா அன்று பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 தற்காலிக பஸ் நிலையங்களில் 2,420 பஸ்கள் நிற்க வைக்கலாம். 2,650 சிறப்பு பஸ்கள், 6,600 நடைகள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு செல்ல 59 தொடர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

தென்னக ரெயில்வே மூலம் 14 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் நெரிசல் தவிர்க்க விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வெளியே 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், உள்ளே 103 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

அன்னதானம் 7 இடங்களில் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 8 குழுக்களாக உணவு தரம் குறித்து சோதனை மேற்கொள்வார்கள். ஆவின் பாலகம் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பரணி தீபத்திற்கு 2,500 பக்தர்களும், மகா தீபத்தின் போது 3 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதன்படி, 72 வெள்ளி நாணயங்களும், 2 கிராம் எடையுள்ள 6 தங்க நாணயங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *