ஜீனியஸ்- திரைப்பட விமர்சனம்
மதிப்பெண்களை மட்டுமே டார்க்கெட் செய்யும் தற்போதைய கல்வி முறையில் மாற்றம் வேண்டும், என்று பல்வேறு சமூக அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், மதிப்பெண்களை எடுப்பதற்காக வெறும் புத்தகத்தை மட்டுமே படித்தால் எதிர்காலத்தில் மாணவர்கள் நிலை என்னவாகும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் படம் தான் ‘ஜீனியஸ்’.
ஹீரோ ரோஷன் சிறு வயதில் இருந்தே படிப்பில் கெட்டிக்காரராக இருப்பது போல விளையாட்டு, ஓவியம் என மற்றவைகளிலும் முதல் மாணவராக வருகிறார். தனது மகனின் இந்த அதீத ஆற்றலை பார்த்து வியக்கும் அவரது தந்தை ஆடுகளம் நரேன், தனது மகனை படிப்பில் இன்னும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த நேரம் படி படி என்றே வற்புறுத்துவதோடு, விளையாட்டு உள்ளிட்ட மற்றவைகளை நிராகரித்துவிட்டு அவரது முழு கவனத்தையும் படிப்பதிலேயே கொண்டு வருகிறார். இதனால், தனது சிறு வயது சந்தோஷங்களை இழக்கும் ரோஷன், எந்த நேரமும் படிப்பு படிப்பு என்றே இருக்க, வளர்ந்து பெரியவராக ஆனதும் அவர் வேலை பார்க்கும் இடத்திலும் இதுவே தொடர்கிறது.
நன்றாக வேலை செய்யும் ரோஷனுக்கு அதிகமான பணி சுமையை அவரது முதலாளி கொடுக்கிறார். இதனால், தூக்கம் இல்லாமல் பல நாட்கள் பணியிலேயே தனது கவனத்தை செலுத்தும் ரோஷன், ஒரு கட்டத்தில் பித்து பிடித்தவர் போல மாறிவிட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், அதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா இல்லையா என்பது தான் ‘ஜீனியஸ்’ படத்தின் மீதிக்கதை.
பிள்ளைகளுக்கு வெறும் படிப்பை மட்டுமே திணிப்பதால் அவர்களது மனமும், உடலும் எப்படி பாதிக்கப்படும் என்பதை விளக்கமாக சொல்லும் இப்படம், படிப்பை மட்டுமே திணிக்காமல் பிள்ளைகள் நிச்சயம் விளையாட வேண்டும், அப்போது தான் அவர்களது உடலோடு மனதும் வலிமை பெறும் என்பதை அழுத்தமாக சொல்கிறது.
இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ரோஷன், கதையின் நாயகனாக கச்சிதமாக பொருந்துகிறார். கதைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள ரொம்பவே மெனக்கெட்டிருக்கும் ரோஷன், செண்டிமெண்ட், காமெடி என அனைத்திலும் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தங்களது பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும், வகுப்பில் முதல் மாணவராக வரவேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருக்கும் பெற்றோர்கள் அதற்காக எப்படி எல்லாம் நடந்துக்கொள்வார்கள் என்பதை நரேனின் கதாபாத்திரம் தெளிவாக புரிய வைப்பதோடு, இப்படி இருந்தால் பிள்ளைகளின் வாழ்க்கை எப்படி தடம் புரளும் என்பதையும் படம் தெளிவாக சொல்கிறது.
படத்தின் முதல் பாதி எதார்த்தமாக நகர்ந்தாலும், ஹீரோயின் பிரியா லால் எண்ட்ரியானவுடன் சினிமாத்தனமாக மாறிவிடுகிறது. அதிலும், மனதளவில் பாதிக்கப்பட்ட ஹீரோ, அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு போன பிறகு சரியாகிவிடுவதாக காட்டியிருப்பதும், அங்கு இருக்கும் ஹீரோயினின் பிளாஷ்பேக் கதையும் புளித்துப்போன சினிமாத்தனமாக இருக்கிறது. இருந்தாலும், ஹீரோ ரோஷனின் கதாபாத்திர அமைப்பும், அதை அவர் கையாண்ட விதமும், சினிமாத்தனம் கலந்த காட்சிகளை சற்று பூசி மழுப்ப பெரும் உதவியாக இருக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் புரியும்படி இருப்பதோடு, காதில் ரீங்காரம் போடும் விதத்தில் மொலேடியாக இருக்கிறது. அதிலும், ”நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி”, ”விளையாடு மகனே விளையாடு” பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை படத்துடன் ஒன்றியே பயணிக்கிறது.
குழந்தைகளின் சந்தோஷங்களை திரையில் காட்டுவதோடு, நமக்கும் சிறுவயது நினைவு வரும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் குருதேவ், கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.
படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மெசஜ் நமக்கு நெருக்கமான ஒன்றாக இருப்பதால் படத்துடன் சட்டென்று நம்மால் இணைந்துவிட முடிகிறது.
படி..படி…என்று பிள்ளைகளை ஒரு எந்திரமாக கையாண்டால், எதிர்காலத்தில் அது எவ்வளவு பெரிய பிரச்சினையில் முடியும், என்ற கருவுக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சுசீந்திரன், பிள்ளைகளை விளையாட வைப்பது மிகவும் அவசியம் என்பதை அழுத்தமாக சொல்லியிருப்பதோடு, பெற்றோர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படமாகவும் இயக்கியிருக்கிறார்.
எல்லாம் அவர்களது எதிர்காலத்திற்காக தான், என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு பிள்ளைகளை மதிப்பெண் வாங்கும் எந்திரமாக மட்டுமே பெற்றோர்கள் பார்க்கிறார்கள். அதேபோல், பெரிய வகுப்பு வந்தவுடன் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு என்று கூறி எந்த நேரமும் படி..படி…என்று பள்ளி நிர்வாகமும் மாணவர்களிடம் படிப்பை திணிக்கிறார்கள். இதுபோன்ற கல்விமுறை தொடர்ந்தால், ‘ஜீனியஸ்’ ஆக வேண்டியவர்கள் கூட ஜூரோவாகிவிடுவார்கள் என்பதை படம் அழுத்தமாக சொல்கிறது.
மொத்தத்தில், இந்த ‘ஜீனியஸ்’ பிள்ளைகளுக்கு வழிக்காட்டியாக இருக்கும் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது.
-ஜெ.சுகுமார்