கஜா புயல் பாதிப்பை யாரும் அரசியலாக்க கூடாது – தமிழிசை செளந்தரராஜன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜனதா சார்பில் ஏற்கனவே அங்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பா.ஜனதா சார்பில் அப்பகுதி மக்களுக்கு உதவ நாளை முதல் சென்னை கமலாலயத்தில் பொருட்களை சேகரித்து திரட்டி அனுப்பவும் முடிவு செய்துள்ளோம்.
அனைத்து கட்சிகளும் இந்த நேரத்தில் யாரையும் களங்கப்படுத்தாமல் களப்பணியாற்றி புயலால் பாதித்த மக்களுக்கு உதவ வேண்டும். இதை யாரும் அரசியலாக்க கூடாது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையை பார்த்து வேதனையடைந்தேன். முதலமைச்சருக்கு இருப்பது இருதயமா? அல்லது இரும்பா? என பட்டிமன்றம் நடத்த இது நேரமல்ல.
பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அவர்களுக்கு அனைவரும் உதவ முன்வர வேண்டும். அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து வருவதாக கூறுகிறார்கள். மக்கள் எதிர்பார்ப்பை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எதிர்பார்ப்பு என்பது வேறு, எதிர்ப்பு என்பது வேறு. மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கும் போது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றக்கூடாது.
மக்கள் கோபத்தில் நியாயம் உள்ளது. நிவாரணம் உடனே கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் போராடியதில் நியாயம் உள்ளது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். எப்போதுமே ஆட்சியாளர்கள் மீது மக்கள் எதிர்பார்ப்பில் இருப்பார்கள் அவர்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அரசின் மூலம் என்னென்ன உதவிகள் தேவையோ அதை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் நான் இதுகுறித்து பேசியுள்ளேன். அவரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருடன் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை அனைவரும் பரிவோடு அணுக வேண்டும். யாரும் இதை அரசியலாக்கக் கூடாது.
தமிழக அரசின் செயல்பாடுகளை கணிக்க இது சரியான நேரம் கிடையாது. நிவாரணப்பணிகள் வந்து கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் முதலில் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்பில் நியாயம் உள்ளது. முதலமைச்சர் இப் போது வந்தால் அதிகாரிகள் அவர் பின்னால் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். தற்போது கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.
பாலுக்கு அழும் குழந்தையை போல மக்களை பரிவோடு கையாள வேண்டும். நிவாரணப்பணிகளில் அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டும். மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
நடிகர்களிடம் இப்பிரச்சனையில் எதையும் எதிர் பார்க்க முடியாது. இப்போது நடப்பது அரசியல் நடிப்பது அவர்கள் தொழில். அனைவரும் களத்தில் இறங்க வேண்டுமே தவிர ஒருவரையொருவர் களங்கப்படுத்திக்கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் தங்க ராஜையன் மற்றும் பலர் உடனிருந்தனர்.