புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிளையார்குளத்தில் புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்வர், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கஜா புயலால் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது. புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யவேண்டும். அதேபோல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வரும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் விரைவாக பணிகள் முடிந்து இயல்பு நிலை திரும்பும்.
புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.