Tamilசெய்திகள்

கஜா புயல் மீட்புப்பணியில் பணியாற்றும் பணியாளர்களை பாராட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கஜா புயல் மீட்புப்பணிகளில் இரவு-பகலாக தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

16.11.2018 அன்று ‘கஜா’ புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே கரையைக் கடந்தபோது, டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

எனினும், புயலின் தாக்கத்தினால், கால்நடைகள், வீடுகள், பயிர்கள், மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதம் அடைந்தன.

‘கஜா’ புயல் கரையை கடப்பதற்கு முன்பும், கடந்த பின்னரும், எனது தலைமையில் பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பல்வேறு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பால், வேட்டி, சேலை, 10 கிலோ அரிசி, மண்எண்ணெய் மற்றும் பருவ மழையிலிருந்து வீடுகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக கூரை மேல் போடுவதற்கு தார்பாய்கள் போன்றவை உடனடியாக வழங்க உத்தரவிட்டிருந்தேன்.

எனது உத்தரவின் பேரில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு பிற மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பணியாளர்கள் அனுப்பப்பட்டு, நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் இரவு-பகல் பாராது, பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலேயே தங்கி, சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றி வரும் அனைத்து துறை பணியாளர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

இந்தநிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு, நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த, திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில், ஓட்டுனராக பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியனின் மகன் பி.நாகராஜ் 25-ந் தேதியன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

கஜா புயலின் தாக்கத்தினால் வீடுகள் சேதமடைந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த நாகராஜின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். நாகராஜின் குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *