கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக புயல் கரையை கடக்க கூடிய அதிகாலையில் 130 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசிய காரணத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் பெருமளவு சேதத்தை திடீரென்று சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 10,000 த்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 33 கி.வாட் மின்பாதை, கிராமங்கள் உள்ளிட்ட அநேக இடங்களில் சாய்ந்துள்ளது. மரங்களும் மின்கம்பத்தில் சாய்ந்த காரணத்தினால் பெரும்பாலான பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்டத் துறைகள் மின்சாரத் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர் அறிவுறுத்தலின் படி முன்னதாக அதிகாலை 4 மணிக்கு மின் இணைப்புகளை துண்டித்த காரணத்தினால் மின்சாரத்தினால் எவ்வித உயிர் இழப்பும் இல்லாத நிலையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பொது மக்களுக்கு மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருவதே மாவட்ட நிர்வாகத்தின் முதல் நோக்கமாகும். எனவே அதற்குரிய பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் அறிவுரையின் படி மின்சாரத்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசி ஏற்கனவே இங்குள்ள மின்சாரப் பணியாளர்களுடன் வெளி மாவட்டங்களிலிருந்து 500 பணியாளர்களும், 33 சிறப்பு அலுவலர்களும் வருகை தர உள்ளனர். இதன் மூலம் இப்பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சேத பாதிப்புகள் கணக்கிடப்பட்டு வருவதுடன் சேதமடைந்த கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் போன்றவை கணக்கெடுக்க வருவாய்த் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.