கஜா புயல் எதிரொலி – குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல 2 நாட்கள் தடை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ‘கஜா’ புயல் தீவிரம் அடைந்துள்ளது. இந்த புயலானது கடலூர்-பாம்பனுக்கு இடையே நாளை மறுநாள் (15-ந்தேதி) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பரவலாக நேற்று மழை பெய்தது. நாகர்கோவில், சுருளோடு, ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிற்றாறு-2-ல் அதிகபட்சமாக 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கஜா புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் 48 மணி நேரம் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள பங்கு தந்தைகள், மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி கடல் பகுதியில் இன்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென்று எச்சரிக்கை வந்துள்ளது. இதையடுத்து மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் 2 நாள் கடலுக்கு செல்லக்கூடாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.