X

கஜா புயலால் பெய்த கனமழை – 9 பேர் பலி

கஜா புயல் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் தாக்கி, தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. புயல் காரணமாக உள்மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கஜா புயல் தாக்கியதில் பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்துவிழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆனந்தன் (40) என்பவர் உயிரிழந்தார்.

விருத்தாச்சலம் அருகே தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் (45) என்பர் உயிரிந்தார். அய்யம்மாளின் கணவர் ராமச்சந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.

அதிராம்பட்டிணத்தில் வீடு இடிந்து 3 வயது பெண் குழந்தையும், திருவண்ணாமலை நகராட்சி செய்யாறு அருகே பிரியாமணி என்ற சிறுமியும், சிவகங்கையில் வீடு இடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

கஜா புயல் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டிணம், கடலூர் மாவட்டங்களில் புயல் தாக்கிய பகுதிகளை சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.